30 ஆகஸ்ட் 2026–பொதுக்காலம் 22-ஆம்
ஞாயிறு (ஆண்டு A)
ஞாயிறு மறையுரை: முனைவர் அருள் தந்தை பேட்ரிக் மத்தியாஸ், ச.ச.
திருப்பலி வாசகங்கள்: முதல் வாசகம்:
எரேமியா 20: 7-9 | பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 63 | இரண்டாம் வாசகம்: உரோமையர்
12:1-2 | நற்செய்தி: மத்தேயு 16:21-27
சிந்தனைக்குரிய இறைவசனம்: "என்னைப் பின்பற்ற விரும்பும்
எவரும் தன்னலம் துறந்து
தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு
என்னைப் பின்பற்றட்டும்." (மத்தேயு
16:24).
ஆண்டவரில்
எனக்குப் பிரியமான சகோதர சகோதரிகளே,
இந்த
ஞாயிற்றுக்கிழமையின் வாசகங்கள், உலகின் வசதிகள்
மற்றும் வெற்றிக்கான அளவுகோல்களைக்
கைவிட்டு, சிலுவையின் மேன்மையான பாதையைத்
தேர்ந்தெடுக்க நமக்குச் சவால் விடுக்கின்றன.
இறைவாக்கினர் எரேமியாவின் உள்ளத்தில் எரிந்த
இறைவனின் வார்த்தையிலிருந்து, புனித பவுல்
அழைப்பு விடுக்கும் மனமாற்றம்
வரை, உண்மையான சீடத்துவம்
என்பது நம்மை முழுமையாக
இறைவனிடம் கையளிப்பதையே குறிக்கிறது என்பதை
நினைவூட்டுகின்றன. இறுதியாக, பேதுருவைக் கடிந்துகொள்ளும்
இயேசு, நாம் நம்மையே
வெறுத்து, அன்றாடச் சிலுவையைச் சுமந்து,
கிறிஸ்துவுக்காக நம் உயிரை
"இழப்பதன்" வழியாகவே உண்மையான வாழ்வைக்
கண்டடைய முடியும் என்று
போதிக்கிறார்.
முதல்
வாசகம்: எரேமியா 20:7-9 எரேமியா 20:7-9 இல், இறைவாக்கினர்
தனது தாங்க முடியாத
வேதனையை இறைவனிடம் கொட்டுகிறார்.
தான் உண்மையாக இறைவார்த்தையைப்
போதித்தபோதிலும், அது தனக்குத்
தொடர்ச்சியான நிந்தனையையும், நிராகரிப்பையும், துன்பத்தையுமே கொண்டுவந்ததாகப் புலம்புகிறார்.
இந்தத் தொடர் துன்புறுத்தல்களால்
சோர்வடைந்த எரேமியா, தன் அழைப்பைக்
கைவிட்டுவிட்டு இனி இறைவனின்
பெயரை உச்சரிக்கப் போவதில்லை
என முடிவெடுக்கிறார். ஆனால்,
இறைவனின் வார்த்தை தனது என்புகளுக்குள்
அடைத்து வைக்கப்பட்ட தீப்போல்
இருப்பதை அவர் உணர்கிறார்;
அந்தத் தெய்வீக உந்துதலை
அவரால் அடக்கி வைக்க
முடியவில்லை. ஆன்மீக ரீதியில்,
இறைவனைப் பின்பற்றுவதால் நமக்கு வசதிகளுக்குப்
பதிலாக துன்பங்களோ, சமூகப்
புறக்கணிப்போ வரும்போது நாம் அனுபவிக்கும்
விரக்தியையும் சோர்வையும் இந்த வாசகம்
உறுதிப்படுத்துகிறது. அதே வேளையில்,
இறைவனோடு ஆழமான உறவை
வளர்த்துக்கொள்ளவும் இது அழைப்பு
விடுக்கிறது. அப்போது இறைவனின் உண்மை
நமக்குள் ஒரு தூய
நெருப்பாக, தணிக்க முடியாத
பெருவிருப்பாக மாறும். மனிதர்களின் தீர்ப்புக்கு
அஞ்சாமல், உலகம் நம்மை
எதிர்த்தாலும் துணிச்சலோடு நம் விசுவாசத்தை
வாழ அது நம்மைத்
தூண்டும்.
இரண்டாம்
வாசகம்: உரோமையர் 12: 1-2
உரோமையர்
12:1-2 இல், திருத்தூதர் பவுல் இறைமக்களைத்
தங்கள் உடல்களைக் கடவுளுக்கு
உகந்த "வாழும் பலியாக"
ஒப்புக்கொடுக்குமாறு உருக்கமாக வேண்டுகிறார். நம்மைச்
சுற்றியுள்ள சுயநலமான உலகப் போக்கின்படி
வாழாமல், தூய ஆவியார்
மூலம் மனம் புதுப்பிக்கப்பெற்று
மாறுதல் அடைய வேண்டும்
என்று அழைக்கிறார். இது
இன்றைய நற்செய்தியில் (மத்தேயு
16:21-27) இயேசுவின் போதனையோடு நேரடியாகத் தொடர்புடையது.
கடவுளின் திருவுளத்திற்குப் பதிலாக உலகத்தின்
வசதி மற்றும் அதிகாரத்தின்
அடிப்படையில் சிந்தித்த பேதுருவை இயேசு
கடிந்துகொள்கிறார். உண்மையான வழிபாடு என்பது
நம்முடைய சொந்தத் திட்டங்களை முழுமையாகக்
கைவிடுவதாகும். நம்முடைய சுயப் பாதுகாப்பு,
வசதி, அந்தஸ்து ஆகிய
உலக ஆசைகளில் நாம்
எங்கு வீழ்ந்துகிடக்கிறோம் என்பதை
ஆராய்ந்து பார்க்க இது சவால்
விடுக்கிறது. மாறாக, தன்னலமற்ற
அன்பு, மன்னிப்பு, மற்றும்
சேவை ஆகிய தியாகங்களை
அன்றாடம் ஏற்க நாம்
அழைக்கப்படுகிறோம். இயேசுவுக்காக நம் உயிரை
இழப்பதன் வழியாகவே நிலைவாழ்வையும் அமைதியையும்
கண்டடைய முடியும் என்ற
அவரது வாக்குறுதியின் மீது
நாம் நம்பிக்கை வைக்க
வேண்டும்.
நற்செய்தி:
பாடுகளைப் பற்றிய இயேசுவின் முன்னறிவிப்பு
(மத்தேயு 16:21-27)
இன்றைய
நற்செய்தியில், இயேசு தமது
பாடுகளைப் பற்றிய மூன்று
முன்னறிவிப்புகளில் முதலாவது அறிவிப்பைக் கூறுகிறார்.
'துன்பம் இன்றிப் பயனில்லை, சிலுவை
இன்றி உயிர்ப்பு இல்லை'
என்ற வாழ்வியல் தத்துவத்தை
இயேசு தன் சீடர்களுக்குப்
போதிக்கிறார். இந்தப் பகுதிக்கு
சற்று முன்புதான், செசரியா
பிலிப்புப் பகுதியில், "நான் யார்
என நீங்கள் சொல்கிறீர்கள்?"
என்று இயேசு கேட்டபோது,
பேதுரு சீடர்கள் சார்பாக,
"நீர் மெசியா, வாழும் கடவுளின்
மகன்" (மத் 16:16) என்று அறிக்கை
இட்டார். இயேசுவின் மெசியா தன்மையை
முதன்முதலாக வெளிப்படுத்தியது பேதுருதான். விண்ணகத் தந்தையின்
வெளிப்படுத்தலால் தான் பேதுரு
இதை அறிந்துகொண்டார் என்று
இயேசு அவரைப் பாராட்டினார்.
"நீ பேதுரு; இந்தப் பாறையின்மேல்
என் திருஅவையைக் கட்டுவேன்.
பாதாளத்தின் வாயில்கள் அதன்மேல் வெற்றி
கொள்ளா... விண்ணரசின் திறவுகோல்களை நான்
உன்னிடம் தருவேன்" (மத் 16:18-19) என்று பெரும்
பொறுப்பையும் வாக்களித்தார்.
பேதுரு:
பாராட்டிலிருந்து கடிந்துகொள்ளுதல்
ஆனால்
அடுத்த கணமே நிலைமை
முழுமையாக மாறுகிறது. இயேசு தனது
பாடுகளைப் பற்றி அறிவித்தபோது,
பேதுரு அதைக் கடுமையாக
எதிர்க்கிறார். தான் இப்போதுதான்
இயேசுவிடம் பாராட்டுப் பெற்றோம் என்ற
எண்ணத்தில், உலக
மீட்புக்காகத் துன்புற்று இறக்க வேண்டும்
என்ற கடவுளின் திட்டத்தை
தடுத்துவிடலாம் என்று பேதுரு
நினைத்தார். இயேசு யார்
என்பதையும், அவர் நிறைவேற்ற
வந்த பணி என்ன
என்பதையும் பேதுரு இன்னும்
முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. பாலைவனத்தில் அலகை (சாத்தான்)
இயேசுவைச் சோதித்தது போல, இப்போது
பேதுருவின் வழியாய் வந்து கடவுளின்
திருவுளத்தைத் தடுக்கப் பார்க்கிறது. அதனால்
தீய ஆவியைக் கடிந்துகொள்வது
போல இயேசு மிகக்
கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார்: "என்
கண்முன் நில்லாதே சாத்தானே,
நீ எனக்குத் தடையாய்
இருக்கிறாய்; ஏனெனில் கடவுளுக்கு ஏற்றவை
பற்றி எண்ணாமல் மனிதருக்கு
ஏற்றவை பற்றியே நீ
எண்ணுகிறாய்" (மத் 16:23). இது எவ்வளவு
கடுமையான வார்த்தை! இவ்வாறு அழைக்கப்படுவதை
நம்மில் எவரும் விரும்ப
மாட்டோம். சாத்தான் என்பவன் கடவுளின்
திட்டத்திற்கு எதிராக நிற்பவன்;
இறைவனின் திருவுளத்தை நிறைவேற்ற விடாமல்
மனிதர்களைச் சோதிப்பவன். பேதுருவைக் கடிந்துகொண்ட
உடனே இயேசு சிலுவையைச்
சுமப்பதன் அவசியத்தைப் பேசுகிறார்: "என்னைப்
பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம்
துறந்து தம் சிலுவையைத்
தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும்" (மத்
16:24).
சீடர்
குருவைப் பின்பற்றுகிறார்
சீடர்
என்பவர் குருவைப் பின்பற்றுபவர்.
இங்கே இயேசு குரு,
பேதுரு சீடர். குரு
முன்னே செல்ல, சீடர்
அவர் பின்னே செல்ல
வேண்டும். ஆனால் பாடுகளைப்
பற்றிய முன்னறிவிப்புக்குப் பின்,
பேதுரு குருவின் இடத்தை
எடுத்துக்கொண்டு, இயேசுவுக்கு அறிவுரை கூற
முற்படுகிறார். திருஅவையின் அடித்தளமாகத் தான்
உயர்த்தப்பட்ட பெருமிதத்தில் அவர் இதைச்
செய்கிறார். எனவே இயேசு
அவருக்கு ஒரு பாடம்
புகட்ட வேண்டியிருந்தது: "பேதுரு,
நீ ஒரு சீடர்
என்பதை மறக்காதே; நீ
எனக்குப் போதிக்க வேண்டாம், மாறாக
உன் அன்றாடச் சிலுவையைச்
சுமந்துகொண்டு என் பின்னே
வா." இதைத்தான் மற்றுமொரு இடத்தில்,
"சீடர் குருவைவிடப் பெரியவர் அல்ல"
(லூக் 6:40) என்று இயேசு
வலியுறுத்துகிறார்.
சிலுவையின்
வழியாய் மீட்பு
பேதுரு
எதிர்பார்த்த உலகளாவிய மாட்சிமை, இயேசுவால்
உடனடியாக உடைத்தெறியப்படுகிறது. மீட்பு சிலுவையின்
வழியாகவே வருகிறது. மற்ற அனைத்தும்
தோல்வியடையும் போது நம்
விசுவாசம் நிலைத்து நிற்பது சிலுவையில்தான்.
சிலுவையில் கடவுள் நமக்காகச்
செய்ததைவிடப் பெரிய அன்பை
எங்கும் காண முடியாது.
சிலுவையில் சிந்தப்பட்ட இரத்தத்தின் வழியாகக்
கிடைத்த உலக மீட்பு,
நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள
முடியாத இறையிரக்கத்தின் செயலாகும்.
சிலுவை ஒரு முரண்பாடான
அடையாளமாகத் தோன்றினாலும், அதுவே நம்பிக்கையின்
சின்னம் மற்றும் உருமாற்றத்தின்
மையம். சிலுவையில்தான் இயேசு
பாவத்தையும் மரணத்தையும் வென்று, கடவுளை
நோக்கிய தடையற்ற பாதையைத்
திறக்கிறார். அவரது மரணம்
மற்றும் உயிர்ப்பின் வழியாக,
நாம் பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து
விலைக்கு வாங்கப்பட்டு, புதிய நம்பிக்கையையும்
வாழ்வையும் பெறுகிறோம். கிறிஸ்துவோடு மரித்து,
மற்றவர்களுக்காக நம்மையே கையளிக்க நாம்
ஒவ்வொருவரும் அழைக்கப்படுகிறோம். மீட்பின் அடையாளமான கிறிஸ்துவின்
சிலுவையை நம் அன்றாட
வாழ்வில் சுமக்க நாம்
தயாராக இருக்க வேண்டும்.
இழப்பை
ஏற்கும் மனநிலை
இந்த
ஞாயிறு வழிபாட்டிலிருந்து நாம்
கற்றுக்கொள்ள வேண்டிய அடுத்த பாடம்,
'இழப்பை ஏற்கும் மனநிலை'.
வெற்றி பெற வேண்டும்
என்றே நாம் சிறுவயதிலிருந்தே
கற்றுக்கொடுக்கப்படுகிறோம். உலகம் வெற்றியாளனையே
கொண்டாடுகிறது; தோற்றவனைப் பார்த்து ஏளனம்
செய்கிறது. ஆனால் 'இழப்பதில்தான்
நாம் பெறுகிறோம்' என்று
இயேசு கற்பிக்கிறார். இது
உலக சிந்தனைக்கு முரணானது.
ஆனால் நிலைவாழ்வை அடைய,
ஒருவர் தனது அவிசுவாசத்தை
இழந்து, இயேசுவின் மீது
விசுவாசம் கொள்ள வேண்டும்.
மனந்திரும்பிய கள்வனிடம் இயேசு, "இன்று
நீ என்னோடு பேரின்ப
வீட்டில் இருப்பாய்" (லூக் 23:43) என்றார். நிலைவாழ்வைத்
தேடிவந்த செல்வந்த இளைஞனிடம், அவனது
உடைமைகளை விற்றுவிடும்படி (இழக்கும்படி) கூறினார். இழப்பதற்கு,
நம் மனம் புதுப்பிக்கப்பட
வேண்டும். இதையே புனித
பவுல், "இந்த உலகத்தின்
போக்கின்படி ஒழுகாதீர்கள். மாறாக, உங்கள்
உள்ளம் புதுப்பிக்கப்பெற்று மாறுதல்
அடையட்டும்" (உரோ 12:2) என்கிறார். "தம்
உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும்
எவரும் அதை இழந்துவிடுவார்.
என் பொருட்டுத் தம்
உயிரை இழக்கும் எவரும்
அதைக் கண்டடைவார்" (மத்
16:25).
துன்பங்களை
ஏற்கும் மனப்பக்குவம்
நமது
சீடத்துவத்திற்கான மற்றொரு பாடம், துன்பங்களை
வாழ்வின் ஒரு பகுதியாக
ஏற்கும் மனப்பக்குவமாகும். உருகப்
பயப்படும் மெழுகுவர்த்தியால் ஒளிகொடுக்க முடியாது; கரைய
மறுக்கும் உப்பால் உணவுக்குச் சுவையூட்ட
முடியாது; உதிர மறுக்கும்
பூவால் காயாகவோ கனியாகவோ
மாற முடியாது. கிறிஸ்து
சிலுவையைச் சுமக்க மறுத்திருந்தால்,
நமக்கு மீட்பு கிடைத்திருக்காது.
துன்பம் இல்லையென்றால் அங்கே
வாழ்வு இல்லை. துன்பங்களிலிருந்து
தப்பித்துவிடவே நாம் அனைவரும்
நினைக்கிறோம். ஆனால் துன்பங்களே
வாழ்விற்கு அர்த்தத்தைத் தருகின்றன. இறைவனின்
திட்டத்தில் துன்பங்களையும் இணைத்துப் பார்ப்பவர்களுக்கு வாழ்வு
உன்னதமானதாக மாறுகிறது. அதனால்தான், "மனிதர்
உலகமுழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் தம்
உயிரை இழப்பாரெனில் அவருக்குக்
கிடைக்கும் பயன் என்ன?"
(மத் 16:26) என்று இயேசு
கேட்கிறார். சிலுவையில் இயேசு தொங்கியபோது
பலரும் அவரைக் கீழே
இறங்கிவரச் சவால் விடுத்தனர்.
ஆனால் அவர் இறங்கி
வரவில்லை. மனித வாழ்வில்
துன்பங்களுக்கு ஒரு மீட்பின்
மதிப்பு உண்டு.
கடவுளுக்கு
ஏற்றவை பற்றி எண்ணுதல்
இது
சுயநல நோக்கங்களை விட்டுவிட்டு,
கடவுளின் திட்டப்படி சிந்திக்க நம்மை
வழிநடத்துகிறது. "கடவுளுக்கு ஏற்றவை பற்றி
எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே
நீ எண்ணுகிறாய்." பேதுரு
இயேசுவை ஒரு அரசியல்
மெசியாவாகக் கற்பனை செய்தார்.
ஆனால் இயேசு பாடுபடும்
மெசியாவாக இருந்தார். பேதுருவால் இதைப்
புரிந்துகொள்ள முடியவில்லை.
நம்
வாழ்விலும், கடவுளின் திட்டங்களை எதிர்த்துப்
போராடும் மனநிலை நமக்குள்
இயல்பாகவே உள்ளது. கடவுள் நம்
வாழ்வில் அவர் விரும்பும்
விதத்தில் செயல்படுவதை நாம் பல நேரங்களில் தடுக்கிறோம். பேதுருவைப்
போலவே, நாமும் இறைவனைப்
பற்றிய மிகச் சிறிய,
குறுகிய பார்வையையே கொண்டிருக்கிறோம்.
ஆனால் மனிதர்களின் பாவங்களை
வெல்லும் இரக்கத்தையும், மரணத்தை வெல்லும் அன்பையும்,
துரோகத்தை அழிக்கும் இறைவனின் பிரமாணிக்கத்தையும்
சிலுவையில் இயேசு வெளிப்படுத்துகிறார்.
தனிப்பட்ட
சிந்தனைக்கான கேள்விகள்
·
என்
வாழ்வில் இயேசுவைப் பற்றிய எனது
புரிதல் எப்படிப்பட்டது?
·
என்
வாழ்வில் கடவுளின் திட்டத்தை நான்
எதிர்க்கிறேனா அல்லது வரவேற்கிறேனா?
·
கடவுளின்
திருவுளம் நிறைவேறத் துன்பங்களை ஏற்க
நான் தயாரா?
·
உலக
ஆசைகளை இழக்கும் மனநிலை
என்னிடம் உள்ளதா?
· நான்
கடவுளுக்கு ஏற்றவை பற்றி
எண்ணுகிறேனா அல்லது மனிதருக்கு
ஏற்றவை பற்றி எண்ணுகிறேனா?
·
என்
அன்றாடச் சிலுவையைச் சுமந்துகொண்டு இயேசுவின்
பின்னே செல்ல நான்
தயாரா?
ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

