4 அக்டோபர் 2026 - பொதுக்காலம் 27-ஆம்
ஞாயிறு (ஆண்டு 'அ')
ஞாயிறு
மறையுரை:
முனைவர் அருள்
தந்தை பேட்ரிக்
மத்தியாஸ், ச.ச.
திருப்பலி
வாசகங்கள்: எசா 5:1-7 | திபா 80 | பிலி 4:6-9 | மத்
21:33-43
தியானிக்க
வேண்டிய முக்கிய வசனம்: "மேலும் ஓர் உவமையைக்
கேளுங்கள்: நிலக்கிழார் ஒருவர் ஒரு திராட்சைத்
தோட்டம் அமைத்தார்; சுற்றிலும் வேலி அடைத்தார்; அதில்
பிழி ஆலை ஒன்றை வெட்டினார்;
காவல் மாடம் ஒன்றையும் கட்டினார்.
பின்பு குத்தகைக்காரர்களிடம் அதை விட்டுவிட்டுப் பயணம்
மேற்கொண்டார்" (மத்தேயு 21:33).
ஆண்டவரில்
அன்புமிக்க சகோதர சகோதரிகளே,
பொதுக்காலத்தின்
25-ஆம் ஞாயிறன்று, இயேசு எருசலேமுக்குள் நுழைவதற்கு
முன்பாக, அனைவருக்கும் கிடைக்கும் கடவுளின் இரக்கமுள்ள அன்பைக்
குறித்து தம் சீடர்களுக்குப் போதித்த
'திராட்சைத் தோட்ட வேலையாள்கள்' உவமையை
(மத் 20: 1-16) சிந்தித்தோம். 26-ஆம் ஞாயிறன்று, திராட்சைத்
தோட்டத்தில் வேலை செய்யும்படி தந்தையால்
அழைக்கப்பட்ட 'இரு புதல்வர்கள்' உவமையை
(மத் 21: 28-32) தியானித்தோம். இதோ, இந்தப் பொதுக்காலம்
27-ஆம் ஞாயிறன்று, தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட திராட்சைத்
தோட்டத்தைக் கவனித்துக்கொண்ட 'கொடிய குத்தகைக்காரர்கள்' உவமையோடு
(மத் 21:33-43) வந்துள்ளோம். இந்த மூன்று ஞாயிறுகளின்
நற்செய்தி வாசகங்களும் ஏதோ ஒரு வகையில்
திராட்சைத் தோட்டத்தோடு தொடர்புடையவை. அவை ஒவ்வொன்றும் நமக்கான
ஒரு சிறப்புப் பொருளையும்
செய்தியையும் கொண்டுள்ளன.
முதல்
வாசகம் - இறைவாக்கினர் எசாயா கூறும் திராட்சைத் தோட்டம்
இன்றைய
முதல் வாசகத்தில் நாம் கேட்பது போல,
இறைவாக்கினர் எசாயா குறிப்பிடும் திராட்சைத்
தோட்டம் என்பது இஸ்ரயேல் குடும்பமேயாகும்:
"படைகளின் ஆண்டவரது திராட்சைத் தோட்டம்
இஸ்ரயேல் குடும்பமே; அவர் விரும்பி நட்ட
கன்று யூதா மக்களே. அவர்களிடம்
அவர் நீதியை எதிர்பார்த்தார்; ஆனால்,
விளைந்ததோ இரத்தக்களரி! நேர்மையை எதிர்பார்த்தார்; ஆனால்,
கேட்பதோ அபயக்குரல்!" (எசா 5:7). நற்செய்தியில் இயேசு
கூறிய உவமையில் அமைந்துள்ள அதே
சூழலைத்தான் இந்த முதல் வாசகமும்
பிரதிபலிக்கிறது. இஸ்ரயேல் மக்களைத் தம்
சொந்த மக்களாகக் கடவுள் முன்குறித்தார்;
ஆனால் அவர்களோ கடவுளின் அழைப்புக்குச்
செவிசாய்க்கவில்லை.
நற்செய்தி
நிகழ்வோடுள்ள தொடர்பு
நற்செய்தி
நிகழ்வில் காட்டப்பட்டுள்ளபடி, இஸ்ரயேல் மக்கள் உடன்படிக்கைக்கு
உண்மையுள்ளவர்களாக இருக்கக் கற்றுக்கொடுப்பதற்காகக் கடவுள் பல
இறைவாக்கினர்களை அனுப்பினார். ஆனால் அவர்களோ செவிசாய்க்காமல்
யாவே இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்தனர்;
கடவுள் அனுப்பிய பல இறைவாக்கினர்களைக்
கொலை செய்தனர். இன்றைய நற்செய்தி
வாசகத்தில், இறைமகனாகிய தன்னை யூத மக்கள்
ஏற்றுக்கொள்ளாததால் வரப்போகும் விளைவுகளை இயேசு முன்னறிவிக்கிறார்.
இந்த உவமையில், இறைமகன் கூட
மன்னிக்கப்படாமல் கொல்லப்படுகிறார். அதனால்தான் இன்றைய நற்செய்தியின் முடிவில்,
மதத் தலைவர்கள் தங்களைப்பற்றியே இயேசு
இவ்வாறு பேசுகிறார் என்பதை உணர்ந்து கொண்டதைக்
காண்கிறோம்: "தலைமைக் குருக்களும் பரிசேயரும்
அவருடைய உவமைகளைக் கேட்டு, தங்களைப்பற்றித்தான்
அவர் பேசுகிறார் என உணர்ந்து
கொண்டனர்." (மத் 21:45).
இரண்டாம்
வாசகம் – பொறுப்புள்ள விசுவாசிகளாக மாறுதல்
நாம்
பொறுப்புள்ள விசுவாசிகளாக (நம்பிக்கையாளர்களாக) இருக்க வேண்டும். பிலிப்பியிலுள்ள
தன் கிறிஸ்தவச் சீடர்களுக்குப்
புனித பவுல் அறிவுறுத்துவது போல,
ஆண்டவரைப் பின்பற்றுவதற்கு நமது திறனுக்கேற்ப அனைத்தையும்
நாம் செய்ய வேண்டும்: "இறுதியாக,
அன்பர்களே, உண்மை எவையோ, கண்ணியம்
எவையோ, நீதி எவையோ, தூய்மை
எவையோ, விரும்பத்தக்கவை எவையோ, பாராட்டுக்குரியவை எவையோ,
நற்பண்பு எவையோ, போற்றுதலுக்குரியவை எவையோ
அவற்றையே மனத்தில் இருத்துங்கள். என்னிடமிருந்து
நீங்கள் கற்றுக்கொண்டவை, பெற்றுக்கொண்டவை, கேட்டுத் தெரிந்துகொண்டவை, என்
வாழ்வில் நீங்கள் கண்டவை ஆகிய
அனைத்தையும் கடைப்பிடியுங்கள். அப்போது அமைதியை அருளும்
கடவுள் உங்களோடு இருப்பார்" (பிலி
4:8-9).
நற்செய்தியின்
பின்னணி
இயேசுவின்
வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்த யூதர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் இன்றைய
நற்செய்தியின் பின்னணி நன்கு தெரிந்திருக்க
வேண்டும். கலிலேய மலைப்பகுதிகளில், நிலக்கிழார்கள்
தங்கள் தோட்டங்களைக் குத்தகைக்கு விட்டுவிட்டு, வாடகை வசூலிப்பதைக் கவனித்துக்கொள்வது
வழக்கமான ஒன்றாகும். நாம் அவருக்குச் செவிசாய்க்கவும்
நம் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளவும்
கடவுள் பல வாய்ப்புகளை
நமக்குத் தருகிறார்.
'திராட்சைத்
தோட்ட வேலையாள்கள்' உவமை, கடவுள் அனைவரிடமும்
இரக்கமுள்ளவர் என்பதையும், தனது அருளை வழங்குவதில்
அவர் எவர் மாட்டும் பாகுபாடு
காட்டுவதில்லை என்பதையும் கற்பித்தது. 'இரு புதல்வர்கள்' உவமையிலும்கூட,
கடவுளின் அழைப்புக்குப் பதிலளிக்க இரு மகன்களுக்கும்
சம வாய்ப்பு அளிக்கப்பட்டதை
நாம் கண்டோம். மூத்த மகன்
மட்டுமே மனம் வருந்தி கடவுளின்
செய்திக்கு செவிசாய்த்தான். இறுதியில், அந்தத் திராட்சைத் தோட்ட
உரிமையாளராகிய கடவுள், நாம் பரிபூரண
வாழ்வைப் பெறும் பொருட்டு தம்
ஒரே மகனை அனுப்பினார்
(யோவா 10:10). அவர் நம் ஒவ்வொருவர்
மீதும் எவ்வளவு அன்புகூர்ந்தார் என்பதற்கு
இதுவே அடையாளம்; நிலைவாழ்வை நோக்கிய
பாதையில் நம்மை வழிநடத்தவே தம்
மகனை அவர் நம்மிடம் அனுப்பினார்.
ஆனால், யாரிடம் அவர் அனுப்பப்பட்டாரோ
அவர்களால் அவர் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, மாறாக கல்வாரி
மலையில் அவரைத் தீர்த்துக்கட்டினர். ஆகையால்,
இறைமகன் மீதான அவர்களுடைய அவிசுவாசத்திற்காகக்
கடவுள் அவர்களைத் தண்டிப்பார்: "தம்
ஒரே மகன் மீது
நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல்
நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த
மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள்
உலகின் மேல் அன்புகூர்ந்தார்."
இதை
புனித யோவான் தன் நற்செய்தியில்
மிக அழகாக வெளிப்படுத்துகிறார்:
"உலகிற்குத் தீர்ப்பு அளிக்க அல்ல,
மாறாகத் தம் மகன் வழியாக
அதைக் மீட்கவே கடவுள் அவரை
உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர்
தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர்
ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின்
ஒரே மகனிடம் நம்பிக்கை
கொள்ளவில்லை" (யோவா 3:16-18). எருசலேமில் நுழைந்த பின்னர் (மத்
21: 1-11) இயேசு இந்த உவமைகளைக் கற்பித்ததால்,
'இரு புதல்வர்கள்' மற்றும் 'கொடிய குத்தகைக்காரர்கள்'
ஆகிய இரு உவமைகளிலும் இயேசு
தங்களைப்பற்றியே பேசுகிறார் என்பதைத் தலைமைக் குருக்களும்
மறைநூல் அறிஞர்களும் புரிந்துகொண்டனர்.
வளரும்
திருச்சபை, ஆண்டவரின் புதிய திராட்சைத் தோட்டம்
நற்செய்தியாளர்
மத்தேயு, இந்த உவமையின் வாயிலாகத்
தம் புதிய சமூகமாகிய,
ஆண்டவரின் புதிய திராட்சைத் தோட்டமான
வளரும் திருச்சபையை ஊக்கப்படுத்தினார். இந்தச் சமூகம் அல்லது
திருச்சபை ஆண்டவரால் நிறுவப்பட்டது. ஆண்டவரின்
பணியாளர்கள் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்தத்
திராட்சைத் தோட்டத்தைப் பராமரிக்க வேண்டும். இறைமக்களும்
தாங்கள் பெற்றுக்கொண்ட அருளுக்கு ஏற்ப வாழ
வேண்டும். கடவுளால் நமக்கு வழங்கப்பட்ட
அருள்கொடைகளுக்கு நாம் உண்மையுள்ளவர்களாகக் காணப்பட
வேண்டும். இன்றைய நற்செய்தியில் இயேசு
தம் கேட்போரை எச்சரிப்பதுபோல,
நாம் கிறிஸ்துவின் செய்திக்குச் செவிசாய்க்காவிட்டால், அது நம்மிடமிருந்து எடுக்கப்பட்டு
நிறைய உள்ளவருக்குக் கொடுக்கப்படும் (மத் 25:28) மற்றும் விசுவாசத்தோடும் உண்மையோடும்
இறையாட்சிக்குச் செவிசாய்ப்பவர்களுக்கு அது வழங்கப்படும் (மத்
21:43).
திராட்சைத்
தோட்ட உரிமையாளரைப் புறக்கணித்தல்
அவர்கள்
நிராகரித்தது ஒரு சாதாரணத் தோட்ட
வேலையாளை அல்ல, மாறாகத் திராட்சைத்
தோட்ட உரிமையாளரையே என்று இயேசு தலைமைக்
குருக்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் இந்த
நற்செய்தியில் எடுத்துரைக்கிறார். இது இயேசுவிடமிருந்து அவர்களுக்கு
வந்த ஒரு தீர்க்கதரிசனச் செய்தியும்
கடுமையான எச்சரிக்கையுமாகும். இறைமகனை மெசியாவாக ஏற்றுக்கொள்ள
விரும்பாத அவர்களின் கலக மனப்பான்மையை
இந்த உவமையின் மூலம் இயேசு
விளக்கினார். அவர்கள் தம்மைக் கைவிட்டு
கொன்றுவிடுவார்கள் என்பதை அவர் அறிந்திருந்தார்.
ஆனால் அதுவே இறுதி முடிவல்ல.
அவர்
இறந்தோரில் இருந்து உயிர்த்தெழுந்து, தம்மை
விசுவாசிக்கும் யூதரல்லாத பிற அனைவருக்கும்
மீட்பைக் கொண்டு வருவார். அவர்கள் அவரைத் தோற்கடிக்க
முடியாது,
மாறாக
எசாயா
இறைவாக்கினர்
உரைத்தபடி
அவர்கள்
அவரால்
அடக்கப்பட்டு
தண்டிக்கப்படுவார்கள்:
"படைகளின்
ஆண்டவர்
ஒருவரே
தூயவர்
எனப்
போற்றுங்கள்;
அவருக்கு
மட்டுமே
நீங்கள்
அஞ்சவேண்டும்.
அவரே உங்களுக்குத்
தஞ்சம்! இரு இஸ்ரயேல் குடும்பத்தாருக்கும்
அவர் இடறல் தரும் கல்லாகவும்,
தடுக்கி விழச்செய்யும் பாறையாகவும் இருப்பார்; எருசலேம் வாசிகளுக்குக் கண்ணியாகவும்
பொறியாகவும் இருப்பார். அவர்களுள் பலர் அவற்றில்
இடறிவிழுந்து நொறுங்குவர்; கண்ணியில் அகப்பட்டுச் சிக்குவர்"
(மத் 21:44; எசா 8:13-15; லூக் 20:18). மேலும், தலைமைக் குருக்களாலும்
மக்களின் மூப்பர்களாலும் நிராகரிக்கப்பட்ட மூலைக்கல்லாக இயேசு மாறப்போகிறார்: "கட்டுவோர்
புறக்கணித்த கல்லே கட்டடத்துக்கு மூலைக்கல்
ஆயிற்று. ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது!
நம் கண்களுக்கு இது
வியப்பாயிற்று!" (மத் 21: 42; திபா 118:22-23).
தனிப்பட்ட
சிந்தனைக்கான குறிப்புகள்
கடவுள்
எப்பொழுதும் நம்மிடம் பொறுமையோடும் தாராள
மனதோடும் இருக்கிறார். ஆனால் இவைகளை நான்
மனம் திருந்தி கடவுளிடம் திரும்புவதற்கான
சரியான தருணங்களாகக் கருதுகிறேனா? புனித பவுல் அறிவுறுத்துவது
போல, என் கோரிக்கைகளையும் தேவைகளையும்
எளிய விசுவாசத்தோடு கடவுளுக்குத் தெரியப்படுத்துகிறேனா? "எதைப் பற்றியும் கவலைப்பட
வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய
இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின்
வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத்
தெரிவியுங்கள்." (பிலி 4:6). என் ஆன்மாவின் மேய்ப்பர்களாலும்
ஆன்மீகத் தலைவர்களாலும் எனக்கு வழங்கப்படும் கடவுளின்
செய்திக்கு நான் செவிசாய்க்கிறேனா? இயேசுவையும்
அவர் செய்தியையும் நான் புறக்கணிக்கிறேனா அல்லது
ஏற்றுக் கொள்கிறேனா?

